டி.முடியனூர் பெரிய ஏரியை தூர்வார நடவடிக்கை

திருக்கோவிலூர், நவ. 16: திருக்கோவிலூர் அருகே டி.முடியனூரில் உள்ளது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி. தகடி செல்லும் சாலையில் உள்ள இந்த ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரிக்கு ஜா.சித்தாமூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து வாய்க்கால் மூலமாக தண்ணீர் வந்து நிரம்பி பின்னர் திருக்கோவிலூர் ஏரி வாய்க்காலில் கலக்கும். இதன் மூலம் டி.முடியனூர் கிராமத்தில் உள்ள சுமார் 150க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த ஏரியும், ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் முழுக்க ஆக்கிரமிப்புகள் சூழப்பட்டுள்ளதாலும் வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் சேதமடைந்துள்ளதாலும் இந்த ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் 25 ஆண்டுகளாக ஆற்று நீரால் இந்த ஏரி நிரம்பாமல் பாலைவனம் போல் தான் இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மேட்டுப்பாங்கான பகுதிகளில் இருந்து தண்ணீர் வரும் போது இந்த ஏரியில் ஓரளவு கால்நடைகள் குடிப்பதற்கு தண்ணீர் இருக்கும். பாசனத்திற்கு முழு அளவில் பயன்படாத அளவில் தற்போது இந்த ஏரி உள்ளது. சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஏரியை தூர்வாரி வாய்க்கால்கள் மற்றும் மதகுகளை சீரமைத்து தண்ணீர் பிடிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சமயங்களில் இதுபோன்ற ஏரிகள், வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் சீரமைத்து தண்ணீரை சேமிக்காததால் ஆற்றில் இருந்து வரும் தண்ணீரும், மழைநீரும் வீணாக கடலில் கலக்கிறது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து டி.முடியனூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்கால்கள் மற்றும் மதகுகளை சீரமைத்து பாசனத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் தண்ணீர் பிடிக்க சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: