பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல்

புதுச்சேரி, நவ. 16: பேரிடர் புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு எஸ்எம்எஸ், இமெயில் மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயலையொட்டி பல்வேறு அரசு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, புயலால் காரைக்காலுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் அங்கு தனி கவனம் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். வங்க கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், நாகை அருகே கரையை கடக்கும் என்றும், இதன் காரணமாக, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி, புதுச்சேரி, காரைக்காலில் கஜா புயலால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைகளை புதுவை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புயல் பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக உள்ளதா? என்பதையறிய முதல்வர் நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் பல்வேறு துறைகளில் நேற்று அதிரடி ஆய்வு செய்தனர்.

 முதலில் பெரிய வாய்க்காலையும், தொடர்ந்து கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலையும் ஆய்வு செய்தனர். அங்கிருந்து லாஸ்பேட்டை இசிஆர் சாலையில் உள்ள பேரிடர் மேலாண்மை துறையின் அவசர கால உதவி மையத்துக்கு சென்றனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து முதல்வர் நாராயணசாமி தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அங்கிருந்த அதிகாரிகளிடம் 1070 எண்ணுக்கு வரும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதுபோல் தெரிவிப்பதில்லை என்று அதிகாரிகள் கூறினர். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி, கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். இதற்காக, அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து இமெயில், எஸ்எம்எஸ் மூலம் புகார்தாரருக்கு தகவல் தெரிவிக்கும் முறையை ஒரு மாதத்துக்குள் கொண்டுவர வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார்.

Related Stories: