×

பயிர் காப்பீடு வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை என தகவல்

மதுரை, நவ. 16: பயிர் காப்பீடு வழங்காததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விவசாயிகளின் வங்கி கணக்கில் காப்பீட்டு பணம் வரவு வைக்கப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பொதுவக் குடியைச் சேர்ந்த முத்துசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விவசாய குடும்பத்தைச் ேசர்ந்த நான், கடந்த 2016-17ம் ஆண்டில் எனது நிலத்தில் கடன் வாங்கி நெல் விவசாயம் செய்தேன். இதற்கு, பொதுவக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இன்சூரன்ஸ் செய்திருந்தேன். நெல் கதிர் விடும் நிலையில், போதிய மழையின்றி கருகியது. மாவட்டத்தின் பெரும்பகுதி வறட்சிக்கு ஆளானது. இதனால், எனக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதே நேரம் நான் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனது. விவசாயத்தை தவிர வேறு வருமானம் இல்லாததால் வறுமையில் சிக்கியுள்ளேன். இந்த ஆண்டு விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளேன்.

பொதுவக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் இணைந்துள்ள கமுதக்குடி, இலந்தைக்குளம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பலருக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், எனக்கும், பலருக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. வறட்சியால் பாதித்த எனக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கினால் தான், எனது குடும்பத்தை காப்பாற்ற முடியும். எனவே, என் குடும்பத்தின் வறுமை கருதி பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி ஐகோர்ட் கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தேன். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 6 வாரத்திற்குள் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர் உள்ளிட்டோருக்கு கடந்த மார்ச் 1ல் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை எனக்கும், என்னைப் போன்ற பலருக்கும் வழங்கப்படவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவன குறைதீர் அலுவலர் ராஜேஷ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், காப்பீட்டு நிறுவனத்தால் இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டு பயனாளிகளின் சேமிப்புக் கணக்கில், உடன் வரவு வைக்குமாறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டது. எனவே, விரைவில் பணம் பயனாளிகளுக்கு வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்து ெகாண்ட நீதிபதி, பயிர் காப்பீட்டுத் தொகையை மனுதாரர்களுக்கு வழங்கி, அதன் விபரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை