×

முதுகுளத்தூர் அருகே இரு தரப்பு மோதலில் போலீஸ் மண்டை உடைப்பு பதட்டத்தால் பலத்த பாதுகாப்பு

சாயல்குடி, நவ. 16: முதுகுளத்தூர் அருகே புளியங்குடியில் இரு தரப்பினர் ஒருவரையொருவர் கல்லெறிந்து தாக்கிக் கொண்டதில் போலீஸ்காரர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் இரு தரப்பினரிடையே போர்டு வைப்பதில் தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் வருவாய்துறை, காவல்துறையினர் இருதரப்பினரிடையே சுமூக பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் கடந்த நான்கு மாதங்களாக புளியங்குடியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இந்நிலையில் நேற்று புளியங்குடியைச் சேர்ந்த ராமன் (61) என்பவர் இறந்தார். இவரின் இறுதிச் சடங்கிற்கு தண்ணீர் எடுப்பதற்காக ஒரு தரப்பினர் புளியங்குடி வடக்கு ஊரணிக்கு சென்றனர். அப்போது ஒருதரப்பினர் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை எறிந்து தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுக்காப்பு பணியிலிருந்த தனிப்படை காவலர் மாடசாமி என்பவரின் மண்டை உடைந்தது. காயமடைந்த மாடசாமியை முதுகுளத்தூர் அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து ராமன் தரப்பினர் காக்கூர், பரமக்குடி சாலையில் கம்பு, கற்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்த எஸ்.பி. ஓம்பிரகாஷ்மீனா, பரமக்குடி சப்-கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் இருதரப்பினருக்கிடையே பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அங்கு பதட்டம் நிலவுவதால் ஏ.டி.எஸ்.பி வெள்ளத்துரை தலைமையிலும், முதுகுளத்தூர் தாசில்தார் மீனாட்சி முன்னிலையிலும் நூற்றுக்கணக்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : clashes ,Mudukulathur ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...