மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் அரசாணை 56ஐ எரித்து போராட்டம்

மதுரை, நவ. 16: மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், அரசாணை 56ஐ எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களை அடையாளம் கண்டு, அனைத்தையும் காலி செய்துவிட்டு, ஒட்டு மொத்தமாக தொகுப்பூதிய முறையில் அப்பணியிடங்களை மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேசய்யா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதனால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் 80 லட்சம் இளைஞர்களின் வேலை பாதிக்கப்படும் என்றும், எனவே ஓய்வு பெற்ற ஐஏஎஸ். அதிகாரி ஆதிசேசய்யா தலைமையில் போடப்பட்ட கமிட்டியை ரத்து செய்ய வலியுறுத்தியும் 15ம் தேதி (நேற்று) அரசாணை 56ஐ எரித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்திருந்தது. அதன்படி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை அரசாணை 56ஐ எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு மாவட்டத்தலைவர் ஜெய ராஜராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் நீதிராஜா விளக்கவுரையாற்றினார். மாநில துணைத்தலைவர் செல்வம் கண்டன உரையாற்றினார். இப்போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: