மாநகராட்சி பூங்காக்களின் நிலை என்ன? அறிக்கை கேட்கிறது ஐகோர்ட் கிளை

மதுரை, நவ. 16: மாநகராட்சி பூங்காக்களின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, தமிழ் சங்கம் ரோட்டைச் சேர்ந்த ஆறுமுகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் ஏராளமான பூங்காக்கள் உள்ளன. இவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அதே நேரம் பூங்காக்களில் தண்ணீர், இருக்கை வசதிகள் இல்லை. போதுமான ஊழியர்கள் இல்லாததால் பூங்காக்கள் பராமரிப்பின்றி வீணாகிறது. இதனால், யாரும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பூங்காக்களை முறையாக பராமரிக்க தேவையான ஊழியர்களை நியமிக்கவும், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேச வலு ஆகியோர், மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டில் எத்தனை பூங்காக்கள் உள்ளன. அவற்றின் தற்போதைய நிலை என்ன. இந்த பூங்காக்களை புனரமைக்கவும், சீரமைக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை டிச.3க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: