மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியில் பழக்கடைகளின் பணிகளை அரைகுறையாக முடித்த மாநகராட்சி தரைத்தளம் கரடுமுரடு

மதுரை, நவ.16: அரைகுறையாக பணிகளை முடித்த மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பழக்கடைகளின் தரைத்தளத்தை கரடுமுரடாக விட்டதால் புதிய தளம் அமைக்க செலவுக்கு மேல் செலவிடுவதாக வியாபாரிகள் புலம்பித்தீர்த்தனர்.

மதுரை நகரில் குறுகிய தெருக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.  இதனால் ஒரு வழிப்பாதை திட்டத்தை போலீசார் செயல்படுத்தினர். தற்போது அதையும் மீறி வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக எகிறி விட்டது. சிம்மக்கல், யானைக்கல், கீழமாரட் வீதி உள்ளிட்ட பகுதி ரோடுகளில் பழக்கடைகள் வைத்துள்ளனர். இக்கடைகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்தது. இந்நிலையில் மாட்டுத்தாவணியில் 4.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.80 லட்சம் வீதம் 16 சிப்பங்களாக பிரித்து ரூ.15 கோடி மதிப்பீட்டில் 240 கடைகள்  கடந்த 2016ல் மே மாதம் கட்டப்பட்டது. மேலும் பழ மொத்த வியாபார சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வணிகர்களின் பங்களிப்பு தொகையாக ரூ.12 கோடி என மாநகராட்சி ரூ.27 கோடியை பெற்றது. இதை வைத்து குடிநீர், சாலை, வடிகால் உள்ளிட்ட வசதிகள் மாநகராட்சி மேற்கொண்டது.

இந்நிலையில் பழக்கடைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திடீரென மதுரை மாநகராட்சி சேர்த்து திறப்பு விழாவையும் நடத்தி முடித்தது. இதற்கான செலவு குறித்து கேட்டால் மாநகராட்சி அதிகாரிகள் வாய்திறக்க மறுக்கின்றனர். பொதுவாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்படும் எந்த ஒரு கட்டுமானமும் ஹைடெக்காக சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும். ஆனால் பழக்கடைகள் கட்டுமானத்தில் எந்த ஒரு ஹைடெக்கையும் பார்க்க முடியவில்லை. மேற்கூரை கான்க்ரீட்டுக்கு பதிலாக தகர சீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதைவிட ஒவ்வொரு கடைகளின் தரைத்தளத்தை கரடுமுரடாக மாநகராட்சி அமைத்துள்ளது. மாநகராட்சியால் ஒப்படைக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள், தரைத்தளத்தை பெயர்த்து எடுத்து வருகின்றனர். இது குறித்து கடைக்காரர்கள் புலம்பித்தீர்த்ததாவது; ஸ்மார்ட் சிட்டி என்ற போர்டு மட்டுமே அலங்காரமாக வைத்திருக்கின்றனர். தரைத்தளத்தை அவசர, அவசரமாக அரைகுறையாக முடித்துள்ளனர். இதில் கால்வைக்கவே முடியாத அளவிற்கு கரடுமுரடாக உள்ளது. பழக்கடைகளுக்காக பல லட்சங்களை இழந்திருக்கிறோம். தற்போது செலவுக்கு மேல் வீண் செலவிட வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பழக்கடைகளுக்கு தரைத்தளம் குறைந்தபட்சம் டைல்ஸ் கற்களாக பதிக்க வேண்டும். எங்கள் ெசலவில் தளங்களை பெயர்த்து எடுத்து டைல்ஸ் கற்களை பதித்து வருகிறோம்’ என்றனர்.

Related Stories: