முறையாக அகற்றாவிட்டால் குப்பைகளை ரோட்டில் குவித்து போராட்டம் வத்தலக்குண்டு மக்கள் அறிவிப்பு

வத்தலக்குண்டு, நவ. 16: முறையாக அகற்றாவிட்டால் குப்பைகளை ரோட்டில் குவித்து போராட்டம் நடத்தவுள்ளதாக வத்தலக்குண்டு அண்ணாநகர் மக்கள் அறிவித்துள்ளனர். வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சேவுகம்பட்டி பேரூராட்சி 7வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் உள்ளது. இங்கு சுமார் 300 வீடுகள் உள்ளன. 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் பல இடங்களில் குப்பைகள் குவியல், குவியலாக உள்ளன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. மேலும் பன்றிகளும் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள தனியார் பள்ளியையொட்டி செல்லும் பச்சைப்பட்டி சாலையில் பெரிய குப்பை குவியல் உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு நோய் தொற்று அபாயம் உள்ளது. அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘வத்தலக்குண்டு அண்ணாநகரில் குப்பைகளை முறையாக அள்ளுவதில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் குப்பைகளை முழுமையாக அகற்ற சேவுகம்பட்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் குப்பைகளை ரோட்டில் குவித்து போராடுவோம்’’ என்றனர்.

Related Stories: