மாணவர்களுக்கு இலவச சைக்கிள் உதிரிப்பாகங்கள் பொருத்தும் பணி தீவிரம்

திருப்பூர், நவ.16: திருப்பூர் மாவட்டத்தில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்குவதற்காக உதிரிப்பாகங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. அதில், பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக, பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இதற்காக, நடப்பாண்டு படிக்கும் பிளஸ்-1 மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனடிப்படையில், லூதியானாவில் உள்ள தனியார் சைக்கிள் நிறுவனத்திடம் இருந்து சைக்கிள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் வாரியாக அனுப்பப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயனாளிகளாக உள்ளனர். இலவச சைக்கிள் உதிரிப்பாகங்கள் லாரிகளில் வரத் துவங்கி உள்ளன. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளிக்கு சைக்கிள் உதிரிப்பாகங்கள் கொண்டு வரப்பட்டு, பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,`திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான இலவச சைக்கிள் உதிரிபாகங்கள் வந்து இறங்கி உள்ளன. சில இடங்களில் பொருத்தும் பணி துவங்கிவிட்டது. பணிகள் முடிந்து மாணவர்களுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: