×

நீலகிரியில் இரவில் கடும் பனி மாறுபட்ட காலநிலையால் பொதுமக்கள் அவதி

ஊட்டி, நவ. 16: நீலகிரியில் பகல் நேரங்களில் வெயில் வாட்டியெடுப்பதாலும், இரவில் கடும் பனிப் பொழிவு காணப்படுதாலும் விவசாயிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து, அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வட கிழக்கு பருவமழை பெய்யும். இம்முறை தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்தது. ஆனால், வடகிழக்கு பருவமழை குறித்த சமயத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மழை இன்னும் துவங்கவில்லை. மாறாக, தற்போது மழையின்றி வெயில் வாட்டியெடுக்கிறது.  எப்போதும் குளிராக காணப்படும் ஊட்டியிலும் கூட பகலில் கடும் வெயில் சுட்டெரிக்கிறது. இதற்கு நேர் மாறாக இரவு நேரங்களில் நீர் பனிக் கொட்டுகிறது.

 இதனால், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் வாட்டியெடுக்கிறது. ஓரிரு நாட்களில் உறைப்பனி விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கால நிலை மாற்றத்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு சளி, தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல், இரவில் பனிக் கொட்டுவதால் தேயிலை, மலை காய்கறிகள் மற்றும் செடி ெகாடிகள் கருக ஆரம்பித்துள்ளன.  மேலும், தொடர்ந்து மழையின்றி இதே நிலை நீடித்தால் கோடைக்கு முன்னரே தேயிலை செடிகள் முற்றிலும் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலையிடைந்துள்ளனர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 17 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 9 டிகிரி செல்சியசுமாக வெப்பம் பதிவாகியிருந்தது.

Tags : Nilgiri ,civilians ,
× RELATED நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜ...