சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கு விவகாரம் உறவினர்களிடம் விசாரிக்க பியுசிஎல் குழு வலியுறுத்தல்

ஈரோடு,நவ.  16: தளவாய்பட்டி சிறுமி ராஜலட்சுமி கொலை வழக்கில் கொலையாளியின் மனைவி  மற்றும் உறவினர்களின் பங்களிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று  பியுசிஎல் உண்மை கண்டறியும் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சேலம்  மாவட்டம்,தளவாய்பட்டியை சேர்ந்த சாமிவேல் என்பவரது மகள் ராஜலட்சுமி(14).  இவரை கடந்த மாதம் 22ம் தேதி அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்கிற  திணேஷ்குமார்(26). என்பவர் வெட்டி படுகொலை செய்தார். கொலையாளி கைது  செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழகத்தையே  அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக மக்கள் சிவில் உரிமைக்கழகம்  மாநில தலைவர் கண.குறிஞ்சி தலைமையில் 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு  தளவாய்பட்டி கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தியது. இக்குழு  சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொலை  செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமி அருகில் உள்ள கொலையாளி திணேஷின் வீட்டில்  இருக்கும் கிணற்றில் குடிநீர் எடுக்கவும், பூ எடுக்கவும் அடிக்கடி செல்வது  உண்டு. இந்த நிலையில் தான் சம்பவத்தன்று மாலை பூ கட்டுவதற்கு நூல் வாங்கி  வருவதற்காக திணேஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது, திணேஷின் மனைவி  சாரதா வீட்டில் இல்லை. திணேஷ் வீட்டில் இருந்து திரும்பி வந்த ராஜலட்சுமி  தன் தாய் சின்னபொன்னுவிடம் தன் மீது தகாத முறையில் திணேஷ் கை வைத்ததாகவும்,  அதனால் தான் ஓடி வந்துவிட்டதாகவும், இனி மேல் திணேஷ் வீட்டிற்கு செல்ல  மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதன் பிறகு தான் கொலை நடந்துள்ளது.கொலை  நடந்த பிறகு திணேஷின் மனைவி சாரதா,தம்பி சசிக்குமார் மற்றும் மைத்துனர்  வெங்கடேஷ் ஆகிய மூவரும் இரு சக்கர வாகனங்களுடன் சாலையில்  நின்றிருந்துள்ளனர். எனவே இக்கொலையில் திணேஷ் தவிர மனைவி உள்பட 3 பேருக்கு  தொடர்பு இருக்க முகாந்திரம் உள்ளது என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும்.  மேலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நேர்மையாக  நடைபெறுவதோடு கொலையாளிக்கு கடும் தண்டனை தரப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட  குடும்பத்திற்கு அரசு தரப்பில் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு  அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: