துறையூர் அருகே அரசு அதிகாரிகள் கைவிரிப்பு ஏரிக்கு 6 கி.மீ. தூரம் புதிதாக கரை அமைத்து கிராம மக்கள் சாதனை

துறையூர், நவ.15: துறையூர் அருகே அரசு அதிகாரிகள் கைவிட்டதையடுத்து 6 கி.மீ. தூரம் ஏரிக்கு புதிதாக கரை அமைத்து கிராம மக்கள் சாதனை படைத்தனர்.

  துறையூரை அடுத்துள்ளது வைரிசெட்டிபாளையம். இங்குள்ள ஜம்பேரி மாவட்டத்தின் 2வது பெரிய ஏரியாகும். சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வெங்கடாசலபுரம் மாராடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 7 ஏரிகளுக்கு தாய் ஏரி. ஜம்பேரி நிறைந்தால்தான் மற்ற ஏரிகளுக்கு நீர் செல்லும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிக்கு முக்கியமான நீராதாரமாக கொல்லிமலையில் இருந்துவரும் பிரதான ஓடை உள்ளது. இந்நிலையில் ஏரியின் தெற்குபுறம் மட்டுமே கரை இருந்தது.

மற்ற 3 பக்கமும் கரைகள் இல்லாததால் ஏரியின் நிலம் சுமார் 180 ஏக்கர் வயல்களாக ஆக்கிரமிக்கப்பட்டு விவசாயம் நடைபெற்று வந்தது. இதனால் ஏரியின் கொள்ளளவு குறைந்து மழைகாலங்களில் நீர்சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டது.1977ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின்போது ஏரியின் நீர்தேக்கி அடித்து செல்லப்பட்டது. அதை சீர் செய்யாததால் மாராடி ஏரிக்கு நீர் வருவதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து பாசன நிலங்கள் தரிசு ஆகும் நிலை ஏற்பட்டது. 1984ம் ஆண்டு உப்பிலியபுரம் இடைத்தேர்தல் நடைபெற்றபோது இப்பகுதி மக்கள் ஜம்பேரி தூர்வாரப்படாததை கண்டித்தும் 3 பக்கமும் கரை அமைக்க கோரியும் இடைத்தேர்தலை புறக்கணித்தனர். அப்போது தேர்தல் பிரசாரத்திற்கு வந்த முதல்வர் எம்ஜிஆர் ஜம்பேரியை பார்வையிட்டு சீரமைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 34 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை அகற்றவும் 3 பக்கமும் கரைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். வாக்காளர் விழிப்புணர்வு சங்கத்தினரும் போராடப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து துறையூர் தாலுகா அலுவலகத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முடிவின்படி வருவாய்த்துறையினர் அளவீடுசெய்து அளந்து கொடுத்தனர்.

இதையடுத்து வைரிசெட்டிபாளையம் கோட்டபாளையம், வலையப்பட்டி, மாராடி உள்ளிட்ட 4 கிராம மக்கள் பிரதாப் என்பவர் தலைமையில் ஜம்பேரி பராமரிப்பு மற்றும் பாசன பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டு ஏரியின் 3 புறமும் 15 லட்ச ரூபாய் செலவில் 6 கி.மீ. நீளத்திற்கு 8அடி அகலம் 6அடி உயரத்திற்கு கரை அமைத்ததுடன் ரூ.35 கோடி மதிப்புள்ள 180 ஏக்கர் நிலத்தையும் மீட்டு அமைதியான முறையில் அரசை நம்பாமல் தாங்களே நிதிதிரட்டி கரை அமைத்து சாதனை செய்துள்ளனர். ஜம்பேரியின் தென்புற கரை 2.1 கிமீ நீளம் கொண்டது. இதன் கரை மீது சமீபத்தில் அரை அடி கிராவல் மண் கொட்டப்பட்டதற்கு ஆன செலவு ரூ.28 லட்சம் ஆகும். ஆனால் 6 கிமீ தூரம் 8 அடி அகல 6 அடி உயர புதிய கரை அமைக்க 15 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளனர். இதுபற்றி ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி கூறும்போது, இதே கரையை அரசு டெண்டர்விட்டு அமைத்திருந்தால் பல கோடிகள் வரை  செலவாகும். இந்நிலையில் மக்களின் சாதனை மகத்தானது என்றார்.

Related Stories: