சட்டிஸ்கர் மாநிலத்தில் பணியின் போது ரிசர்வ் போலீஸ் எஸ்ஐ., மாரடைப்பால் மரணம்

இடைப்பாடி, நவ.15: சட்டிஸ்கர் மாநிலத்தில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் எஸ்ஐயின் உடல், அவரது சொந்த ஊரான இடைப்பாடியை அடுத்த மணியகாரம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த வேம்பனேரி மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்(54). இவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீசில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி, பணியில் இருந்த கணேசன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், நேற்று சொந்த ஊரான மணியகாரம்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

கோவை டிஎஸ்பி சதீஸ்குமார் நேரில் வந்து, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது எஸ்ஐ கணேசனின் உறவினர்கள், ராணுவ மரியாதை அளிக்க வேண்டும் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், எஸ்ஐ கணேசன் மாரடைப்பால் இறந்துள்ளார் என்பதற்கான மருத்துவ சான்றிதழை காண்பித்த அதிகாரிகள், அவருக்கு ராணுவ மரியாதை வழங்க இயலாது எனக்கூறி அவர்களை சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து காலை 9 மணிக்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: