சொத்து வழக்கில் விசாரணைக்கு வந்த விவசாயி சேலம் கோர்ட்டில் திடீர் சாவு

சேலம், நவ.15: சேலம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார்.

சேலம் உத்தமசோழபுரம் அருகே உள்ள பூசாரிக்காட்டை சேர்ந்தவர் செங்கோடன் (68). விவசாயி. இவரது சொத்து தொடர்பான வழக்கு ஒன்று சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று காலை 11 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரான செங்கோடன், பின்னர் வராண்டாவில் காத்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஓடி வந்து முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.

உடனடியாக நீதிபதி கோபிநாத் இருக்கையில் இருந்து இறங்கி வந்து, செங்கோடன் கையை பிடித்து பரிசோதனை செய்து பார்த்தார். மேலும் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்திருந்த 2 டாக்டர்களும் வந்து பரிசோதனை செய்து பார்த்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு செங்கோடனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுபற்றி உறவினர்களுக்கு போலீசார் தகவல் அளித்தனர். உறவினர்கள் வந்து உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: