டெங்கு கொசு உற்பத்தியை தடுக்காத விடுதிகள், ஓட்டல்கள் மீது நடவடிக்கை

சேலம், நவ. 15: டெங்கு கொசு உற்பத்தியை தடுக்காத ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.  

தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் விழிப்புணர்வு பணியில் வீடு, வீடாக சென்று 300 பேர் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு கொசு உற்பத்தியை மாநகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தடுக்கவும் மாநகராட்சி சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் உள்ள குடிநீர் தொட்டிகளை காற்று புகாத வண்ணம் மூடி வைத்திருக்கிறார்களா?, பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்காத வகையில் மண் நிரப்பி வைக்கப்பட்டுள்ளதா?, பழைய பஸ், வேன் டயர்களை தண்ணீர் தேங்கும் வகையில் போட்டு வைத்துள்ளார்களா? மாநகர சுகாதார துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.  டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என விளக்கம் கேட்டு மாநகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு மாநகராட்சியின் சுகாதாரதுறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ‘‘டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது குறைபாடு கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட ஓட்டல்கள், விடுதிகள் மீது தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

Related Stories: