×

பள்ளிபாளையம் வட்டாரத்தில் வேகமாக பரவும் கோமாரி நோய்

பள்ளிபாளையம், நவ.15: பள்ளிபாளையம் வட்டாரத்தில் கோமாரி நோய் வேகமாக பரவி வருகிறது. தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளையும் இந்த நோய் தாக்கியுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.பள்ளிபாளையம் ஒன்றியத்தில் பள்ளிபாளையம், குப்பாண்டபாளையம், சமயசங்கிலி, கொக்கராயன்பேட்டை, பாப்பம்பாளையம், எலந்தகுட்டை உள்ளிட்ட 15 கிராம ஊராட்சிகளில் சுமார் ஒரு லட்சம் கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இதில் பசு, எருமை உள்ளிட்டவை மட்டுமே சுமார் 20 ஆயிரத்தை தாண்டும். இந்த ஆண்டு பருவமழை சரியான தருணத்தில் பெய்து, மேட்டூர் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தீவனப்புல் எளிதாக கிடைப்பதால், புதிய கால்நடைகளை விவசாயிகள் வாங்கி வளர்க்கின்றனர். ஒரு ஜோடி கறவை மாடுகள் ₹1 லட்சத்தை தாண்டி விலை போகிறது.

இந்நிலையில், கோமாரி நோய் கால்நடைகளை பரவலாக தாக்கி வருகிறது. பாப்பம்பாளையம், கொக்கராயன்பேட்டை, பள்ளிபாளையம் பகுதியில் தற்போது வேகமாக கோமாரி நோய் பரவி வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். நோய் தாக்குதலுக்குள்ளான கால்நடைகளுக்கு அதிக காய்ச்சல் ஏற்படும். வாயில் உமிழ்நீர் வடியும். கால் குளம்புகளில் வெடிப்பு ஏற்பட்டு, அதில் மண் புகுந்து கொள்வதால் நடக்க முடியாமல் சிரமப்படும். எதிர்ப்பு சக்தி இல்லாத மாடுகள் இரண்டொரு நாட்களில் இறந்து போகும். 3 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிபாளையம் பகுதியில் கோமாரி நோய் பாதிப்பால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்தன. தற்போது, விவசாயிகள் கால்நடைகளுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வோடு தடுப்பூசி போட்டுள்ளனர். இருந்த போதிலும் தடுப்பூசி போடப்பட்ட கால்நடைகளும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே, நாமக்கல் கால்நடை மருத்துவமனை மூலம் பள்ளிபாளையத்தில் சிறப்பு முகாம் அமைத்து உடனடியாக சிகிச்சை மேற்கொண்டு கால்நடை இழப்பை தடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallipalayam ,region ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு