கூலி நெசவாளர்கள் சொந்த தயாரிப்பிற்கு மாற விசைத்தறி பொது பயன்பாட்டு மையம்

பல்லடம், நவ.15: திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும்  விசைத்தறியாளர்கள் சங்கம் தலைவர் வேலுசாமி, செயலாளர் அப்புக்குட்டி ஆகியோர்  கூறியதாவது: விசைத்தறியாளர்கள் தங்களிடம் விசைத்தறிகள் வைத்திருந்தாலும், பாவுநூல் வாங்க வசதியில்லாமல், ஜவுளி உற்பத்தியாளர்கள் கொடுக்கும் பாவுநூலை பெற்று, அதை கூலிக்கு நெய்து கொடுத்து வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்கள் போதிய கூலி வழங்காததால் விசைத்தறியாளர்களுக்கு வருவாய் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.

இதனால் விசைத்தறியாளர்களே பாவுநூல் தயாரிக்கவும், அதற்கு தேவையான சைசிங் மில் உருவாக்கவும், அதில் உற்பத்தியாகும் பாவுநூலை கொண்டு, தங்களது விசைத்தறிகளில் சொந்தமாக துணி தயாரிக்கவும், அந்த துணியை மதிப்பு கூட்டப்பட்ட துணியாக மாற்ற, ப்ளீச்சிங் மற்றும் பிரிண்டிங் செய்து விற்பதன் மூலம் ஓரளவு லாபம் பெற முடியும்.  இதற்காக 4 ஏக்கர் நிலத்தில் ஒரு சைசிங் மில், அதோடு ப்ளீச்சிங் மற்றும் பிரிண்டிங் ஆகிய கட்டமைப்புகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தோம்.

 திட்ட மதிப்பில் மத்திய அரசு 80 சதவீதமும், மாநில அரசு 5 சதவீதமும், முதலீட்டாளர்கள் 15 சதவீதமும் பங்களிக்க உள்ளன. அதன்படி மாநில அரசு ரூ.ஒரு கோடி, மத்திய அரசு ரூ.12.5 கோடி மானியம் வழங்க முன்வந்துள்ளன. இதில் விசைத்தறியாளர்கள் பங்களிப்பாக ரூ.4.12 கோடி முதலீடு செய்யப்படுகிறது. மொத்தம் ரூ.17.62 கோடி மதிப்பில் பல்லடம் அருகே எலவந்தியில் விசைத்தறி பொது பயன்பாட்டு மையத்திற்கான இடம் தேர்வு, பதிவு ஆகிய பணிகள் 3 மாதத்தில் முடிவடையும், பின்னர் ஒரு மாதத்திற்குள் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவி பெறப்படும்.

இதையடுத்து உள்கட்டமைப்பு வசதிகள், கட்டடங்கள், இயந்திரங்கள் நிறுவுதல் ஆகிய பணிகள் மேற்கொண்டு, வரும் 2019ம் ஆண்டு இறுதிக்குள் விசைத்தறி பொது பயன்பாட்டு மையம் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதில் தற்போது முதல்கட்டமாக 40 முதல் 45 முதலீட்டாளர்கள் பங்கேற்க முன்வந்துள்ளனர். மேலும் முதலீட்டாளர்களை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும்  விசைத்தறியாளர்கள் சங்கம் தலைவர் வேலுசாமி, செயலாளர் அப்புக்குட்டி ஆகியோர்  கூறினர்.

Related Stories: