×

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் இதய நோய் பரிசோதனை

ஊட்டி, நவ. 15: உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் இதய நோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உலக நீரிழிவு நோய் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பொது சுகாதாரத்துறை சார்பில் ஊட்டியில் உள்ள நகர்ப்புற தாய்சேய் மையத்தில் நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார்.   இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், சிகிச்சை முறைகள், நோய் பாதிப்பு ஏற்படாத வண்ணம் விழிப்புடன் இருப்பது போன்றவைகள் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, சர்க்கரை, கொழுப்பு உள்ளிட்ட நோய் பாதிப்புகள் உள்ளனவா என பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் முருகேசன் கூறுகையில், இந்தியாவில் சமீபகாலமாக மரபு வழி நோய் பாதிப்புகள் ஏற்படுத்துவது அதிகரித்துள்ளது. அவற்றை கட்டுபடுத்துவது அவசியமாகிறது. இதனால் ஒவ்வொரு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாநோய் பரிசோதனை பிரிவு ஏற்படுத்தப்பட்டு அங்கு ெசவிலியர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு வரும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு, சர்க்கரை, கொழுப்பு மற்றும் இதய நோய் பாதிப்புகள் குறித்து பரிசோதனைகள் இம்மையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரிசோதனையில் மேற்கண்ட பாதிப்புகள் இருக்கும்பட்சத்தில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு கட்டுபாடுகள், சிகிச்சைகள் முறைகள் குறித்து அறிவுறுத்தப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்கா மருத்துவமனைகள், 36 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு இன்று (நேற்று) அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரபு வழி நோய் பாதிப்பு பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டன, என்றார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : public ,World Diabetes Day ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...