தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பண்ணாரி அம்மன் கோயில் விவரம் கேட்டவருக்கு நேரில் வருமாறு பதில்

சத்தியமங்கலம், நவ. 15: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பண்ணாரி அம்மன் கோயில் விவரங்களை கேட்டவருக்கு நேரில் வருமாறு கோயில் நிர்வாகம் பதில் அனுப்பியுள்ளது.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சதுமுகை கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார்(45). இவர், பண்ணாரி அம்மன் கோயில் செயல் அலுவலருக்கு கோயில் குறித்த விபரங்கள் வேண்டி 7 வினா அடங்கிய மனுவினை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் தருமாறு  கடந்த அக்டோபர் 5ம் தேதி  மனு அனுப்பினார்.

 இதில், இக்கோயில் எந்த ஆண்டு இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது, கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பெயர் விபரம், கோயிலுக்கென வாங்கப்பட்ட வாகன விவரம், 4 சக்கர வாகனத்திற்கு ஓட்டுநர் நியமிக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட கேள்விகள் மட்டுமே இதில் இடம் பெற்றிருந்தன.  இந்நிலையில் கடந்த வாரம் கோயில் நிர்வாகத்திலிருந்து செல்வகுமாருக்கு தபால் வந்தது. இதை பார்த்த செல்வகுமார் அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் இவர் கேட்ட எந்த கேள்விக்கும் அதில் பதில் தெரிவிக்கவில்லை.

 மாறாக அதில் அளிக்கப்பட்ட பதிலில், மனுதாரர் கேட்ட விவரங்களுக்கு பட்டியல் வடிவில் தயார் செய்யப்பட்டு விவரங்கள் அளிக்க வேண்டியுள்ளதால் மேற்படி பணிகளை மேற்கொண்டால் அலுவலகப்பணி பாதிக்கப்படும்.எனவே மனுதாரர் நேரில் வந்து விவரம் அறியலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் மனுதாரரை நேரில் வரச்சொல்லி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் அனுப்பிய மனுவிற்கு பதில் அனுப்பியுள்ள கோயில் நிர்வாகத்தின் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக மனுதாரர் செல்வகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கோயில் செயல் அலுவலர் பழனிகுமாரிடம் கேட்ட போது, பெரிய பட்டியலாக உள்ளதால் மனுதாரர் நேரில் வந்தால் அதற்குரிய கட்டணம் செலுத்தி நகலை பெற்றுக் கொள்ளலாம், என்றார்.

Related Stories: