விசைத்தறி ஜவுளி துணி வர்த்தகம் மந்தம் சைசிங் மில்களில் பாவு நூல் உற்பத்தி பாதிப்பு

கோவை, நவ.15:  கோவை, திருப்பூரில் தீபாவளிக்கு பின் விசைத்தறி துணி வர்த்தகம் மந்தமாக உள்ளதால், சைசிங் மில்களில் பாவுநூல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பாவுநூல் இல்லாமல் விசைத்தறிகளும் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் உள்ளனர். இவர்கள் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் நூல் வாங்கி, அவற்றை சைசிங் மில்களில் கொடுத்து, விசைத்தறி துணி நெசவுக்கு ேதவையான பாவுநூலாக மாற்றுகின்றனர். பின்னர், பாவுநூலை கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்களிடம் கொடுக்கின்றனர். அவற்றை பெறும் விசைத்தறியாளர்கள் தங்கள் வசமுள்ள 2 லட்சம் விசைத்தறிமூலம் துணியாக நெய்கின்றனர்.

 தீபாவளிக்கு முன்பு 2 மாதம் வரை விறுவிறுப்படைந்த விசைத்தறி துணி வர்த்தகம், தீபாவளிக்கு பின் மந்தமடைந்துள்ளது. விசைத்தறி துணி வாங்க பல்லடம், சோமனூர் வர வேண்டிய வியாபாரிகள் வரவில்லை. நேரடி விற்பனையும் விறுவிறுப்படையவில்லை. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவுநூல் உற்பத்தியை ஒத்திபோட்டுள்ளனர். இதனால் சைசிங் மில்களில் பாவுநூல் உற்பத்தியும், விசைத்தறிகளில் துணி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகை கால ஆடை மற்றும் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிப்பிற்காக தீபாவளிக்கு முன்பு விசைத்தறி துணி அதிகளவில் விற்பனையாகின.

தீபாவளிக்கு பிறகு அவற்றின் விற்பனை மந்தமடைந்துள்ளதால், வியாபரிகள் மற்றும் வட மாநில உற்பத்தியாளர்கள் விசைத்தறி துணி வாங்குவதை வெகுவாக குறைத்துள்ளனர். விற்பனைக்கு நாம் முயன்றாலும், அவர்கள் துணிக்கு உற்பத்தி செலவை விட குறைவாக விைல நிர்ணயிப்பதால், துணியை விற்பது நஷ்டத்தை ஏற்படுத்துகிறது, இதனால் தற்காலிகமாக பாவுநூல், விசைத்தறி துணி உற்பத்தியை தவிர்த்துள்ளோம். துணிக்கு விலை சீரடைந்த பின்னர், மீண்டும் துணி உற்பத்தி சீரடையும்,’ என்றனர். இது குறித்து பாவுநூல் தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘கோவை மாவட்டம் சோமனூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஆகிய பகுதிகளில்  சைசிங் மில்கள் கடந்த தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு உற்பத்தி நிறுத்தப்பட்டது.

தீபாவளி முடிந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும், ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவுநூல் தயாரிக்க ஆர்டர்களை அளிக்காததால்,  பெரும்பாலான சைசிங் மில்களில் மீண்டும் உற்பத்தி துவங்கவில்லை.’என்றனர் இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறுகையில், ‘ஏற்கனவே தொழிலாளர் பற்றாக்குறையால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விசைத்தறிகள் போதிய அளவில் இயங்காமல் உள்ளது. இந்நிலையில், பாவுநூல் வினியோகமும் போதிய அளவு இல்லாததால், தொழிலாளர்கள் உள்ள விசைத்தறிகளும் இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது.’ என்றனர்.

Related Stories: