பொள்ளாச்சியில் புடலங்காய் விளைச்சல் அமோகம்

பொள்ளாச்சி, நவ. 15: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப் படியாக மானாவாரி மற்றும் காய்கறி சாகுபடி அதிகமாக உள்ளது. அதிலும், வடக்கிபாளையம், டி.நல்லிகவுண்டன்பாளையம், சூலக்கல், பொன்னாபுரம், கோட்டூர், முத்தூர், அம்பராம்பாளையம், போடிபாளையம், ஜமீன்ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் பந்தல் காய்கறிகளான புடலங்காய், பாகற்காய் மற்றும் பீர்க்கங்காய் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

இதில், அதிகப்படியாக புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டில் தொடர்ந்து பல மாதமாக பெய்த பருவமழையை தொடர்ந்து, விவசாயிகள் பலர் பந்தல் காய்கறியான புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டனர்.  தற்போது அவை நன்கு விளைந்துள்ளது. பல பகுதிகளில் அறுவடைசெய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுவது தொடர்ந்துள்ளது.  இன்னும் பல கிராமங்களில், அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்த ஆண்டில் புடலங்காய் விளைச்சல் வழக்கத்தைவிட அதிகரிப்பால், மார்க்கெட்டுக்கு அதன் வரத்து மேலும் அதிகரித்ததுடன் விலை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒருகிலோ புடலங்காய் ரூ.25வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ஒருகிலோ ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.12க்கே என குறைவான விலைக்கு விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதிலும், பெரும்பாலும் கேரளா வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர். புடலங்காய் விளைச்சல் அதிகரித்து, மார்க்கெட்டில் விற்பனை அதிகமாக இருந்தாலும், விலை கடும் வீழ்ச்சியால், உரிய லாபம் கிடைப்பதில்லை என  விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Related Stories: