புதுவையில் இருந்து சாராயம் கடத்திய 2 பெண்கள் கைது

கடலூர், நவ. 15: புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு இருசக்கர வாகனத்தில் நூதன முறையில் சாராயம் கடத்தி வந்த இரண்டு பெண்களை புதுநகர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில்இருந்து கடலூர் வழியாக தென் தமிழக பகுதிக்கும் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கும் மது கடத்தல் தொடர்கதையாகி வருகிறது. இதையடுத்து மாவட்ட காவல்துறை உத்தரவின்பேரில் கடலூர், புதுவையில் சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் புதுநகர் காவல்நிலைய போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் பெண்கள் வேகமாக வந்து கொண்டிருந்தனர். புதுச்சேரியில் இருந்து வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து வாகனத்தை சோதனையிட்டபோது நூதன முறையில் சாராயத்தை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் தீவிர விசாரணையில் இருவரும் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் மனைவி தாட்சாயினி (39), பாதிரிக்குப்பம் பிரியா (21) என்பது தெரியவந்தது.

இதில் புதுபாளையத்தை சேர்ந்த சரவணன் ஏற்கனவே பல்வேறு மது பாட்டில்கள் மற்றும் சாராய கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது மனைவி தாட்சாயினி சாராய கடத்தலில் ஈடுபட்டு சிக்கிக்கொண்டது தெரியவந்தது. போலீசார் ஆண்களை மட்டுமே சோதனை செய்வர் என்பதால் நூதன முறையில் சாராய கடத்தலில் பெண்கள் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்திவரப்பட்ட 100 லிட்டர் சாராயம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்தனர்

Related Stories: