புயலை எதிர்கொள்ள 53 குழுக்கள் அமைப்பு

விழுப்புரம், நவ. 15: விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கஜா புயல் எச்சரிக்கையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய முதலியார்சாவடியில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்களிடம் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சின்ன முதலியார்சாவடியில் உள்ள மீனவ கிராமத்திற்கு சென்று கடற்கரை பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். கடற்கரையோரம் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இது தொடர்பாக மீன–்வளத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அங்கிருந்து புறப்பட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் தந்திராயன்குப்பம் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், கஜா புயலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் 19 மீனவ கிராமங்களில் 5 கிராமங்கள் வீதம் ஒரு சப்-கலெக்டர் தலைமையில் உயரதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு துறையை சேர்ந்த 750 அதிகாரிகள் கொண்ட 53 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிராமத்துக்கு 10 பேர் வீதம் 2,300 தன்னார்வ இளைஞர்களும், மாவட்டம் முழுவதும் கால்நடைகளை மீட்க 1,300 இளைஞர்களும் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில் 12 புயல் பாதுகாப்பு மையமும், 400 திருமண மண்டபம், பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றார். ஆய்வின்போது வானூர் தாசில்தார் ஜோதிவேல், கோட்டக்குப்பம் டிஎஸ்பி இளங்கோவன், இன்ஸ்பெக்டர் திருமேணி, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அருணாச்சலம் மற்றும் வருவாய்த்துறை, தீயணைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: