அரிசி ஆலை உமிகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

கள்ளக்குறிச்சி, நவ. 15:       கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுவிநியோகதிட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் காந்த் தலைமை தாங்கினார். தனி வட்டாட்சியர்கள் சையத்காதர், அருங்குளவன், மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் வரவேற்றார். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பேசுகையில் கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோடு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சித்ததேரி வாய்க்கால் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்காததால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.  கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் அரிசி ஆலைகளில் உள்ள உமிகள் காற்றில் பறந்து வருவதால் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இவற்றில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அப்போது சார் ஆட்சியர் காந்த் கூறுகையில் அனைத்து புகார்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேல்முருகன், கல்யாணசுந்தரம், செயல் அலுவலர்கள் கோமதி, தெய்வீகன், நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: