30 கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

சின்னசேலம், நவ. 15: விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் கல்வராயன் மலையடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த அணையில் இருந்து உற்பத்தியாகும் கோமுகி ஆறு கள்ளக்குறிச்சி வழியாக பாய்ந்தோடி, கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் மணிமுக்தா நதியுடன் கலக்கிறது. இந்த கோமுகி ஆற்றின் குறுக்கே செம்படாச்குறிச்சி, சோமண்டார்குடி உள்ளிட்ட 11 இடங்களில் அணைக்கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் ஒரு பகுதியை கச்சிராயபாளையம், வடக்கநந்தல் ஏரிகளுக்கும், மற்றொரு கால்வாயின் மூலம் கடத்தூர், தெங்கியாநத்தம், நல்லாத்தூர், சின்னசேலம் உள்ளிட்ட ஏரிகளுக்கும் செல்கிறது. இதன்மூலம் கோமுகி ஆற்று நீர் 40 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று அதன்மூலம் 5860 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமல்லாமல் புதிய கால்வாய் பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர், மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் சுமார்5000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

வடகிழக்கு, தென்மேற்கு பருவமழையின்போதும், கல்வராயன்மலையில் அதிக மழைபொழியும் காலங்களிலும் அணையில் நீர் சேமிக்கப்பட்டு  ஒவ்வொரு ஆண்டும் பாசனத்திற்காக அக்டோபர் மாதம் திறந்து விடப்படுகிறது.. இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் 29ம் தேதி மாவட்ட ஆட்சியரால் அணையில் இருந்து ஆறு மற்றும் பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டது.கோமுகி அணை திறந்ததில் இருந்து இன்றுவரை புதிய பாசன கால்வாயில் 100 கனஅடி நீர் பாசனத்திற்காக விவசாயிகளின் நலன்கருதி திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதேபோல ஆற்று பாசனத்தில் உள்ள கச்சிராயபாளையம், வடக்கநந்தல் ஆகிய ஏரிகளுக்கு செல்லும் கால்வாயில் மட்டும் சுமார் 100 கனஅடி நீர் செல்கிறது. ஆனால் கோமுகி அணை திறந்து 15 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் ஆற்றில் நீர் திறந்து விடாமல் கீழணை மதகில் பலகை வைத்து அடைத்து விட்டதால் கோமுகி ஆறு வறண்டுபோய் குட்டையாக நீர் தேங்கி உள்ளது.

அந்த நீரும் இன்னும் ஓரிரு நாளில் வற்றி விடும் நிலை உள்ளது. இதனால் கோமுகி ஆற்றின் கரையோரம் உள்ள கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், மேட்டுப்பாளையம், ஏர்வாய்பட்டிணம், தோப்பூர், மட்டிகைகுறிச்சி, கள்ளக்குறிச்சி, தென்கீரனூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. வடக்கநந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆற்றுப்பாலத்திற்கு அருகில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் தற்போது குறைந்து உள்ளது. அதேபோல சின்னசேலம், நமச்சிவாயபுரம், தென்செட்டியந்தல், தொட்டியம், தென்கீரனூர், விளம்பாவூர், சித்தலூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கும் நீர் செல்லாததால், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும் மழையை எதிர்பார்த்து உள்ளனர். கச்சிராயபாளையம் கோமுகி அணையில் தற்போது சுமார் 34 அடி நீர்மட்டம் உள்ள நிலையில் ஒரு பகுதி விவசாயிகளுக்கு மட்டும் திறந்து விட்டுவிட்டு, ஆற்றுப்பாசனம் மற்றும் கடத்தூர் கால்வாய் பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. மாவட்ட கலெக்டர் முறையாக விசாரணை நடத்தி கோமுகி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: