×

காவு வாங்க காத்திருக்கும் பேரிடர் மேலாண்மை மையம்

சாயல்குடி, நவ. 15:சாயல்குடி அருகே கடற்கரை பகுதிகளில் கட்டப்பட்ட பேரிடர் மேலாண்மை பல்நோக்கு மையம் திறக்கப்பட்டு ஏழு மாதங்களுக்குள் சேதமடைந்ததால்,  இயற்கை பேரிடர் காலத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால் மீனவ கிராம மக்கள் தங்குவதற்கு அச்சமடைந்துள்ளனர். சாயல்குடி அருகே உள்ள டி.மாரியூர், கன்னிகாபுரி ஆகிய கடற்கரை கிராமங்களில் மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கடலோர பேரிடர் அபாயம் குறைப்பு திட்ட பல்நோக்கு மைய கட்டிடம் கட்டப்பட்டது.டி.மாரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் சுமார் 500 பேர் தங்கும் வசதி கொண்ட பள்ளி வடிவிலான இரு பயன்பாடு புதிய கட்டிடம் ரூ.197. 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதத்தில் கட்டிடம் திறக்கப்பட்டது. இந்நிலையில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டும், கண்ணாடி ஜன்னல்கள் முழுவதும் உடைந்தும், வண்ணப்பூச்சுகள் பெயர்ந்தும் விழுவதாக மீனவ கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

இது குறித்து மாரியூர் கிராம மக்கள் கூறும்போது, டி.மாரியூரில் கட்டப்பட்ட பேரிடர் கால புதிய பல்நோக்கு மைய கட்டிடம் தரமற்று, வலுவிழந்து காணப்படுகிறது. பெயிண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகிறது. கட்டிடம் சேதமடைவதை பயன்படுத்தி சமூகவிரோத கும்பல் கண்ணாடி ஜன்னல், மின்சாதன பொருட்களை உடைத்து வருகின்றனர். இதனால் ஜன்னல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இன்றி ஜெனரேட்டர், மின்விசிறி, மின்மோட்டார், பல்புகள் போன்ற பொருட்கள் திருடுபோகும் அபாயம் உள்ளது. பள்ளி வளாகத்திற்குள் தரமற்று கட்டப்பட்ட கட்டிடத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது கஜா புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பாதிப்பு ஏற்படும்போது அதிகாரிகள் இக்கட்டிடத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் இக்கட்டிடம் சேதமடைந்து கிடப்பதால் இங்கு தங்கினால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கட்டிடத்தை சீரமைத்து பாதுகாப்பு அம்சத்தை உறுதிபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : Disaster management center ,purchase ,
× RELATED களியனுர் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு