மின்னணு வாழ்வாதார சான்றிதழை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும்

புதுச்சேரி, நவ. 15:  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் 2019ம் ஆண்டுக்கான  மின்னணு வாழ்வாதார மற்றும் மறுமணம் ஆகா சான்றிதழை அவரவர் ஓய்வூதியம் பெறும்  வங்கிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் வம்சி கிருஷ்ண டின்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகம் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே 2019ம் ஆண்டுக்கான மின்னணு வாழ்வாதார மற்றும் மறுமணம் ஆகா சான்றிதழை அவரவர் வங்கிகளில் சமர்ப்பிக்க தேவையான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் 6 ஓய்வூதியம் வழங்கப்படும் வங்கி உயர்அதிகாரிகளுடன் நடத்தப்பட்டுள்ளது. வங்கிகளும் தேவையான வசதியை ஏற்படுத்தி கொடுப்பதாக உத்தரவதம் கொடுத்துள்ளனர்.

எனவே, இந்த வசதியை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய மின்னணு உயிர்வாழ் சான்றிதழை தங்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிகளில் சமர்ப்பிக்கலாம். இச்சேவையில் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர், புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளரை (ஓய்வூதியம்) நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஏனெனில், வங்கிகள் ஓய்வூதியதாரர்களின் உயிர்வாழ் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் இந்த அலுவலகத்திற்கு சமர்ப்பிப்பது வங்கிகளின் கடமையாகும். மேலும், இந்த வசதியை பொதுசேவை மையங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உயிர்வாழ் சான்றிதழை பதிவு செய்பவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு நகர், ஓய்வூதிய ஆணை எண் மற்றும் கைபேசி ஆகியவற்றுடன் வங்கி கிளைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். மின்னணு உயிர்வாழ் சான்றிதழை புதுப்பிக்க தவறிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் ஜனவரி 2019 முதல் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: