புதுவை அணி அபார பந்துவீச்சு பீகார் 171 ரன்னில் சுருண்டது

புதுச்சேரி, நவ. 15: ஜிகே நாயுடு கோப்பைக்கான (23 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு) கிரிக்கெட் போட்டி நாடு முழுவதும் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் மணிப்பூர் அணியுடன் புதுவை சிஏபி அணி மோதியது. இந்த போட்டி டிராவில் முடிந்தாலும் முதல் இன்னிங்சில் புதுவைக்கு 3 புள்ளிகள் கிடைத்தது. இந்நிலையில் புதுவை அணிக்கான 2வது போட்டி பல்மைரா மைதானத்தில் நேற்று நடந்தது. முதலில் பீகார் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் புதுவை  அணி வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், பீகார் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அணி கேப்டன் குப்தா( 3), ரவிக்குமார் சர்மா (4), திரிபுரரி கேசவ் (13), பாஸ்கர்(1) சச்சின் குமார்(28), ரிசாவ்( 15), ஷிமான்சூசிங் (16), திலீப்குமார்(20)  ரன் எடுத்து அவுட் ஆனார்கள்.

தொடக்க வீரர் கனி மட்டும் நிலைத்து ஆடி 63 ரன் எடுத்தார். பீகார் அணி 51.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்னில் சுருண்டது. புதுச்சேரி அணி வீரர்கள் ஆகாஷ் 4 விக்கெட், சித்தாத்சிங் 3 விக்கெட், அபிஜித் 2 விக்கெட், புவன் 1 விக்கெட் சாய்த்தனர். தொடர்ந்து புதுவை அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரகு 42 ரன், ஜார்ஜ் 14 ரன் எடுத்து அவுட்ஆனார்கள். ஆகாஷ் 6 ரன்னில் வெளியேறினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் புதுவை அணி 39 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்திருந்தது. அணி கேப்டன் சாய் 3 ரன்னுடனும், பரஸ் ரத்ன பார்கே 61 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

Related Stories: