பாழடைந்த கட்டிடத்தில் இயங்கும் வேல்ராம்பேட் அங்கன்வாடி மையம்

புதுச்சேரி, நவ. 15:  புதுச்சேரி, வேல்ராம்பேட், நடுத்தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பாழடைந்த சமுதாய நலக்கூட கட்டிடத்தில் இம்மையம் இயங்கி வரும் நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அங்கு அனுப்பி வைக்க தயங்கி வருகின்றனர். இந்த கட்டிடத்தை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. மேலும் இரவு நேரங்களில் அங்கு சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு வசதியாக அங்கு காம்பவுன்ட் சுவரும் இடிந்த நிலையில் கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதிக்கு செல்வதற்கே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக அங்கன்வாடியில் குழந்தைகளின் எண்ணிக்கையும் முற்றிலுமாக குறைந்துவிட்டது.

 எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், காவல்துறையினர் மோசமான இந்த கட்டிடத்தை ஆய்வு செய்து அங்கன்வாடி மையம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். பாழடைந்த இந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி தொகுதி எம்எல்ஏ பாஸ்கரிடம் முறையிடவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு அங்கன்வாடி மையங்களுக்கு பயனாளிகள் செல்ல வேண்டி இருப்பதால் அதை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

Related Stories: