புயல் முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட கலெக்டர் 2வது நாளாக ஆய்வு

காலாப்பட்டு, நவ. 15:   விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் கஜா புயல் எச்சரிக்கையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் சுப்ரமணியன் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். நேற்று முன்தினம் பெரிய முதலியார்சாவடியில் உள்ள பேரிடர் பாதுகாப்பு மையத்தை கலெக்டர் சுப்ரமணியன், விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார். பின்னர், சின்ன முதலியார்சாவடியில் உள்ள மீனவ கிராமத்திற்கு சென்று கடற்கரை பகுதிகளை பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும். கடற்கரையோரம் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

அதனை பெற்றுக்கொண்ட ஆட்சியர், இதுதொடர்பாக மீனவளத்துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதையடுத்து கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலியார்சாவடி, சுனாமி குடியிருப்பு, தந்திராயன்குப்பம் பகுதிகளில் சுப்பிரமணியன் நேற்று 2வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது. படகு, வலை போன்றவற்றை மேடான பகுதியில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறவுறுத்தினார். தொடர்ந்து கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள அவசர காலத்திற்கான குடிநீர் டேங்க், மணல்மூட்டை, மரக்கட்டைகள், சாலை சீரமைப்பதற்கான உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார். ஆய்வின்போது பேரிடர் பாதுகாப்பு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி பழனிசாமி, வானூர் தாசில்தார் ஜோதிவேலு, கோட்டக்குப்பம் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமேணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: