தயார் நிலையில் அங்கன்வாடி மையங்கள்

புதுச்சேரி, நவ. 15: தமிழகம், புதுவைக்கு கஜா புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளது. பேரிடர் கால அவசர கால தொடர்பு எண்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தி உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் உத்தரவின்பேரில் புதுச்சேரி முழுவதும் அங்கன்வாடி மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள், பேரிடர் ஆபத்தில் சிக்குபவர்களை உடனே மீட்டு அருகிலுள்ள அரசின் மையங்களில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான பணிகளில் அங்கன்வாடி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக ஒவ்வொரு அங்கன்வாடி மையம் மற்றும் அதன் அருகிலுள்ள சமுதாய நலக்கூடம், பள்ளி கட்டிடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அடுத்த 2 நாட்களுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரும் தவறாமல் பணிக்கு வரவும், ஒவ்வொருவருக்கும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் முழுநேர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: