ரவுடி கும்பலை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன? ரவுடியிசம், கூலிப்படை அதிகரிப்பு

* ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

* வரும் 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: தமிழகத்தில் அதிகரித்துள்ள ரவுடியிசத்தையும், கூலிபடைகளையும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்று பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அயனாவரம் பகுதியில் இரு ரவுடி கும்பலுக்கு இடையே நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி லோகேஷ், வேலு, சுரேஷ் (எ) பிளேபாய் சுரேஷ், அஜித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் வேலு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், வேலு தன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கைப் பார்க்கும்போது தமிழகத்தில் ரவுடியிசமும், கூலிப்படையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது என்பதால் இந்த வழக்கில் மத்திய அரசின் உள்துறைச் செயலர், தமிழக டிஜிபி ஆகியோரையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்.

தமிழகம் மற்றும் நாடு முழுவதும் எத்தனை ரவுடிக்கும்பல்கள், கூலிப்படைகள் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் இந்த கும்பலைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை என்ன?. எத்தனை கொலைகள் நடந்துள்ளது?. எத்தனை பேருக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது?. குறிப்பாக சென்னையில் இதன் தாக்கம் என்ன?. எத்தனை ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?.

ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக ரவுடி கும்பல்கள் வளர்த்துவிடப்படுகிறதா?. போலீஸ் உயரதிகாரிகளின் ஆசியுடன் இயங்கிவரும் ரவுடி கும்பல்கள் எத்தனை?. அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்ட ரவுடிகளை தங்களது கட்சி நிர்வாகிகளாக நியமித்துள்ளனவா?. எத்தனை ரவுடிகள் தங்களை சட்டத்தின் பிடியில் இருந்து காத்துக்கொள்ள அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்?. எத்தனை ரவுடிகள் சட்டப்படிப்பை விலை கொடுத்து வாங்கியுள்ளனர்?. வெளிமாநிலங்களில் இருந்து வந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் கூலிப்படைகள் எத்தனை?.

இதுபோன்ற கும்பல்களுக்கு மதம் மற்றும் சாதி அமைப்புகள் ஆதரவாக செயல்படுகிறதா?. இந்த ரவுடிகும்பல் மீதான மோகத்தில் இருந்து இளையோர்களைக் காப்பாற்றி நல்வழிப்படுத்த என்ன சீர்திருத்தங்கள் கையாளப்படுகிறது?. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் ரவுடிகளை கட்டுப்படுத்த டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் ஏன் சிறப்புப்பிரிவை தொடங்கக்கூடாது?. ரவுடிகள் மற்றும் கூலிப்படையை கட்டுப்படுத்தும் விதமாக  மகாராஷ்டிரா மற்றும்  கர்நாடகா மாநிலங்களில் உள்ளதுபோல தமிழகத்திலும் ஏன் பிரத்யேக சட்டம் இயற்றக்கூடாது?. என கேள்விகளை எழுப்பி இந்த கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வரும் நவ.30ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

* இந்த வழக்கைப் பார்க்கும்போது தமிழகத்தில் ரவுடியிசமும், கூலிப்படையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது என்பது அப்பட்டமாக தெரிகிறது. இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது என்பதால் இந்த வழக்கில் மத்திய அரசின் உள்துறைச் செயலர், தமிழக டிஜிபி ஆகியோரையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம்.

* ரியல் எஸ்டேட் மற்றும் அரசியல் ஆதாயத்திற்காக ரவுடி கும்பல்கள் வளர்த்துவிடப்படுகிறதா?. போலீஸ் உயரதிகாரிகளின் ஆசியுடன் இயங்கிவரும் ரவுடி கும்பல்கள் எத்தனை?. அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்ட ரவுடிகளை தங்களது கட்சி நிர்வாகிகளாக நியமித்துள்ளனவா?. எத்தனை ரவுடிகள் தங்களை சட்டத்தின் பிடியில் இருந்து காத்துக்கொள்ள அரசியல் கட்சிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்?.

Related Stories: