பயிற்சி அளிக்கும்போது விபரீதம் குதிரை உதைத்து காவலரின் கண் பார்வை பறிபோனது

சென்னை: குதிரைகளுக்கு பயிற்சி அளிக்கும் போது எதிர்பாராத விதமாக குதிரை எட்டி உதைத்ததில் காவலர் ஒருவருக்கு கண் பார்வை பரிபோனது. இந்த சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இரண்டாம் நிலை காவலரான இவர் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஆயுதப்படையில் உள்ள குதிரைப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். வழக்கமாக ஆயுதப்படையில் உள்ள குதிரைகளுக்கு காவலர்களே பயிற்சி அளிப்பது வழக்கம். அதன்படி, கடந்த 12ம் ேததி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் குதிரைகளுக்கு காவலர்கள் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தனர். இந்த பயிற்சியில் காவலர் மணிகண்டன் ஈடுபட்டிருந்தார். அப்போது இளம் குதிரை ஒன்று பயிற்சிக்கு சரியாக ஒத்துழைக்காமல் முரண்டு பிடித்து கொண்டிருந்தது. அந்த குதிரையை மணிகண்டன் மெதுவாக தடவி கொண்டு பயிற்சி கொடுத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குதிரை தனது பின் காலால் மணிகண்டன் முகத்தில் எட்டி உதைத்தது.

இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு இடது கண்ணில் ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் காவலர் மணிகண்டன் துடித்தார். உடனே சக காவலர்கள் மணிகண்டனை மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் கண்ணை பரிசோதனை செய்த போது, குதிரை உதைத்ததில் கண் மிகவும் சேதமடைந்துள்ளது. தற்போதைய நிலையில் மணிகண்டனுக்கு கண் பார்வை திரும்ப வருவது மிகவும் கடினமான ஒன்று என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் மருத்துவர்கள் கண்பார்வைக்காக அறுவை சிகிச்சை ெசய்து உள்ளனர். முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவர் கண்காணிப்பில் தொடர் சிகிச்சையிலேயே உள்ளார். காவலர் ஒருவருக்கு கண்பார்வை பறிபோன சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: