சட்டத்தை வளைத்தால் ஜனநாயகம் சம்மட்டியால் அடிக்கும் வேலூரில் திருமாவளவன் பேட்டி ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

வேலூர், நவ.15:ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சட்டத்தை வளைத்தால் ஜனநாயகம் சம்மட்டியால் அடிக்கும் என்று வேலூரில் தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் மாநாடு திருச்சியில் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேலூரில் நேற்று மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இது ஜனநாயகத்தை மதிக்காத ராஜபக்ஷேவுக்கு கிடைத்த சம்மட்டி அடி. இதனால் சிறிசேனாவுக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதால் அவர் அதிபர் பதவியில் இருந்து விலகவேண்டும். அதிகாரத்தை பயன்படுத்தி சட்டத்தை வளைக்கலாம் என்கிற அதிகார போக்கிற்கு ஜனநாயகம் நல்ல பாடத்தை புகட்டியுள்ளது. இதேபோல் இந்தியாவிலும் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். நீதித்துறை மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசிக்காமல் ஒரே இரவில் நடந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். அரூர் அருகே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்த மலைவாழ் சிறுமியின் இறப்பிற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை பாஜ எதிர்க்கிறது.

நடிகர் ரஜினிகாந்த், பாஜ ஆட்சி குறித்து ரஜினி மிக சாதுர்யமாக பதிலளித்துள்ளார். மோடி ஒரு பலசாலி என்கிறார். பாம்பு பெரியதா? படை பெரியதா? என்றால் படைதான் பெரியது. நச்சுப்பாம்பை அகற்ற படைகள் இணைந்துள்ளது. திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி இணக்கமாகத்தான் உள்ளது.

திமுக உட்பட ஒருசிலர் இருகட்சிகளிடையே தேவையின்றி இடைவெளி உண்டாக்க முயற்சிக்கின்றனர். அந்த திட்டம் பலிக்காது. திருச்சியில் நடக்கும் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: