கைதியிடம் 3 செல்போன் சிம்கார்டுகள் பறிமுதல் 45 நாட்களில் 11 செல்போன் பறிமுதல் வேலூர் மத்திய சிறையில்

வேலூர், நவ.15: வேலூர் மத்திய சிறையில் கொலை கைதி ஒருவரிடம் இருந்து 3 செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 45 நாட்களில் மட்டும் 11 செல்போன்கள் பறிமுதல் செயப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் 750க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கைதிகளுக்கு தடையின்றி கிடைத்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த மாதம் மட்டும் சிறை காவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில், மண்ணில் புதைத்திருந்த செல்போன்கள், கைதிகள் அறையில் இருந்தது என மொத்தம் 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சிறையில் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சிறை நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த கார்மேகம்(40) என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் 3வது பிளாக்கில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 12ம் தேதி சிறை காவலர்கள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது கார்மேகத்தின் அறைக்கு பின்னால் உள்ள பகுதியில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 செல்போன்கள், மேலும் 6வது பிளாக்கின் அருகே உள்ள சுவற்றில் மறைத்து வைத்திருந்த சிம்கார்டுகளை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிறை அதிகாரி பாகாயம் போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், சிம்கார்டுகளில் உள்ள எண்ணில் தொடர்புக்கொண்டு பேசியவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் மத்திய சிறையில் கடந்த மாதம் முதல் நேற்று முன்தினம் வரை மொத்தம் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்வது தொடர் கதையாக உள்ளது. கைதிகளுக்கு செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை சிறை காவலர்கள் சிலர் பணத்தை பெற்றுக்கொண்டு உதவுவதாக கூறப்படுகிறது. அவர்களின் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டும் சிறையில் செல்போன் நடமாட்டத்தை முற்றியிலும் தடை செய்ய முடியும். கைதிகளுக்கு உதவும் சிறை காவலர்கள் மீது சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: