பெரியார் பல்கலைக்கழகத்தில் தேர்வாணையர், பதிவாளர் பதவிகளை நிரப்பக்கோரி ஆர்ப்பாட்டம்

ஓமலூர்,  நவ.14: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், நீண்ட காலமாக காலியாக உள்ள  தேர்வாணையர், பதிவாளர் பதவிகளை உடனடியாக நிரப்பிடக்கோரி,  தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு,  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் நான்காம் மண்டலத்தின் சார்பில், சேலம்  பெரியார் பலகலைக்கழகத்தின் முன், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நான்காம் மண்டல  செயலர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பசுபதி  ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மண்டல தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் மாநில தலைவர் பிச்சாண்டி ஆகியோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தன்னாட்சி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மதிப்பீட்டு தலைவர் மற்றும் முதன்மை  தேர்வாளர் பணியை வழங்ககூடாது என வலியுறுத்தப்பட்டது. மேலும், இளங்கலை பாடப்பிரிவில் விடைத்தாள்களின் எண்ணிக்கையை 25ல்  இருந்து 30 ஆகவும், முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு 20ல் இருந்து 25 ஆகவும்  அதிகரித்து மதிப்பீட்டு தரத்தை சிதைக்கக்கூடாது. முதன்மை தேர்வாளருக்கு  இதுவரை ஒதுக்கப்பட்ட 5 தேர்வாளர்களை 7 தேர்வாளர்களாக உயர்த்தக்கூடாது; விடைத்தாள் மதிப்பீடு செய்யும் நேரத்தை காலை 10 மணி முதல் மாலை 4 என்பதை  மாற்றி, மாலை 5 மணி வரை நீட்டிக்கக்கூடாது; பாடத்திற்கு அப்பாற்பட்ட  வினாக்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும்; நீண்ட காலமாக காலியாக  உள்ள தேர்வாணையர், பதிவாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மண்டல  பொருளாளர் பிரபாகர் நன்றி கூறினார்.

Related Stories: