பாலத்தில் கார் மோதி விபத்து 30அடி உயரத்தில் இருந்து விழுந்து இரும்பாலை ஊழியர் பலி

சேலம், நவ.14: சேலம் பட்டர்பிளை பாலத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஓய்வு பெற்ற இரும்பாலை ஊழியர் பலியானார்.சேலம் கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் நேற்று கார் ஒன்று விபத்தில் சிக்கியதாக அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் விரைந்து சென்றனர். அப்போது, கார் ஒன்று அங்குள்ள தடுப்பு சுவரில் மோதி நின்றது. அந்த காரை, கோவை கோயில்பாளையத்தை சேர்ந்த கதிரேசன் (36) என்பவர் ஓட்டி வந்திருந்தார். இவர், பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கோவைக்கு சென்றுவிட்டு பெங்களூருக்கு திரும்பி சென்றபோது பட்டர்பிளை பாலத்தின் வளைவில் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார். பாலத்தில் மோதிய வேகத்தில் காரில் இருந்து ஏர்பலூன் வந்ததால் கதிரேசன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். அப்போது போலீசார் 30 அடி பாலத்தில் இருந்து கீழே எட்டிப்பார்த்தபோது அங்கு ஒருவர் முட்செடிகளுக்குள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவரை போலீசார் மீட்டனர். அவரை பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரிந்தது.

விசாரணையில், அவர் கொண்டலாம்பட்டி பாட்டப்பன் நகரை சேர்ந்த அருள்மாறன் (60) என்பதும், இரும்பாலையில் சீனியர் ஆபரேட்டாரக  பணியாற்றி கடந்த மாதம்தான் ஓய்வு பெற்றார் என்பதும் தெரியவந்தது. இவரது மனைவி ஜேன்பால் தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதையடுத்து டிரைவர் கதிரேசனிடaம் விசாரித்தபோது விபத்தில் அவர் அடிப்பட்டதே தெரியாது என்றார். தொடர்ந்து கதிரேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: