வாழப்பாடியில் இன்று செல்வமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

வாழப்பாடி, நவ.14: சேலம் மாவட்டம் வாழப்பாடி இந்திராநகரில் உள்ள செல்வமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று (14ம் தேதி) காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த வியாழக்கிழமை கோயிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டு, முளைப்பாரி, கங்கணம் கட்டுதல் உள்ளிட்டவையும் நடைபெற்றது.நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கிணற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், மாலை சிறப்பு பூஜையும் நடைபெற்றது. இன்று காலை யாக சாலையில் இருந்து தீர்த்தம் புறப்பாடு மற்றும் தீபாராதனை, மகா அபிஷேகம் நடைபெறுவதுடன், காலை 9 மணியளவில் ஊர் பெரியவர்கள், கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் செல்வமுத்து மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

துறையூர் மங்கப்பட்டி ராம் ஐயர் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இவ்விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு மாரியம்மன் அருள்பெற வேண்டும் என, கோயில் தர்மகர்த்தா பழனியப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: