ஜெயலலிதா சாவில் உள்ள மர்மங்கள் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையில் தெரிந்துவிடும்

கும்பகோணம், நவ. 14: ஜெயலலிதா சாவில் உள்ள மர்மங்கள், நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணையில் தெரிந்துவிடும் என்று கும்பகோணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவபதி பேசினார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த பெருமாண்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் 47ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில், பானை உடைந்தால் திருவோடு கிடைக்கும். அதே பானை சுக்குநூறாக உடைந்தால் அதுவும் கிடைக்காது. அதுபோன்று ஆகிவிட்டது தினகரனை நம்பி சென்ற. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் நிலைமை. ஜெயலலிதா இறந்த பிறகு கட்சி, ஆட்சியை கைப்பற்ற நினைத்தார் தினகரன். நல்ல வேளையாக அதிமுகவை எடப்பாடி பழனிசசாமி, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் ஆகியோர் காப்பாற்றி பாதுகாத்து விட்டனர் என்றார்.முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி பேசுகையில், கமல்ஹாசனின் செல்வாக்கு சினிமாவோடு சரி, மக்களிடம்  எடுபடாது. ரஜினிகாந்த் தனது சினிமா நன்றாக ஓட வேண்டும் என்பதற்காகவே அரசியலை ஆயுதமாக பயன்படுத்துகிறார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை தவிர சினிமாவில் இருந்து வந்து கட்சி நடத்திய சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், ஆகியோரது நிலைமை என்னவானது என்று உங்களுக்கு தெரியும். இதே நிலைமை தான் நடிகர் கமல்ஹாசனுக்கும் ஏற்படும். ஜெயலலிதாவை விரல் நீட்டி, நாக்கை கடித்து விஜயகாந்த் பேசினார். அவரது நிலைமை என்னவானது என்று பாருங்கள். தினகரன் மன்னார்குடிகாரர் என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த குடும்பமே அந்த ஊர் தான். ஆனால் 1991ம் ஆண்டு மட்டும் தான் அதிமுக அங்கு வெற்றி பெற்றது. மற்ற எல்லா தேர்தலிலும் தோல்வி தான். சொந்த ஊரிலேயே கட்சியை காப்பாற்ற முடியாதவர்கள் தான் தினகரன் குடும்பத்தினர். ஜெயலலிதாவை பார்க்க அப்பல்லோ மருத்துவமனையில் 3 நாட்கள் இரவு, பகல் பாராது காத்திருந்தோம். ஆனால் தினகரன் கும்பல், எங்களை பார்க்க விடவில்லை. ஜெயலலிதா சாவில் உள்ள மர்மங்கள், நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையில் தெரிந்துவிடும் என்றார்.

Related Stories: