×

மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்ட ஆய்வுப்பணி

கரூர், நவ. 14: மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்ட ஆய்வுப்பணி நடந்து வருகிறது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.கரூர் மாவட்டத்தை கடந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் விபத்துக்களை தடுக்கும் வகையில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் படி 5 இடங்களில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதனை துவக்கி வைத்தனர்.பின்னர் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கூறுகையில்,
கரூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 7ல் கருப்பம்பாளையம், பெரியார்வளைவு (சின்ன ஆண்டாங்கோயில் பிரிவு), வெண்ணைமலை (ராம்நகர் பிரிவு), மண்மங்கலம் மற்றும் அய்யம்பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் சாலையை கடக்கும் போது தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் விபத்து ஏற்படாத வகையில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது. முன்னதாக இந்த பகுதிகளில் வலது மற்றும் இடதுபுறம் என இரண்டு உயர்கோபுர மின்விளக்குகளை சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து தலா ரூ.4,998 லட்சம் வீதம் 10 உயர் கோபுர மின் விளக்குகள் ரூ. 49 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சாலையின் குறுக்கே கடக்கும் இடத்தில் அதிகளவு  பிரகாசமான ஒளி ஏற்படுவதால் வாகன ஒட்டிகளின் கவனம் ஈர்க்கப்பட்டு சாலை விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளது. பொதுமக்களும் சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்கள் ஏற்படாத வகையில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் கவிதா, தாசில்தார் ரவிச்சந்திரன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Construction worker ,bridge ,Manmangalam National Highway ,
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...