×

தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் பேரிகார்டுகள்

திருமங்கலம், நவ.14: திருமங்கலம் விருதுநகர், திருமங்கலம் ராஜபாளையம் உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் நடுவே வைக்கப்பட்டிருக்கும் போலீசாரின் பேரிகார்டுகளே விபத்துகளுக்கு வழிவகுப்பதாக டிரைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருமங்கலம் போக்குவரத்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்துகளை தவிர்க்கும் வகையில் மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலை மற்றும் திருமங்கலம் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்துள்ளனர். விபத்தினை தவிர்க்க வைக்கப்பட்ட இந்த பேரிகார்டுகளே தற்போது விபத்துகளை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கள்ளிக்குடி, மையிட்டான்பட்டி, ஆவல்சூரன்பட்டி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் நான்கு வழிச்சாலையில் உள்ள பேரிகார்டுகளில் வாகனங்கள் மோதி விபத்துகள் அதிகரித்துள்ளன. இதேபோல் ராஜபாளையம் ரோட்டில் ஆலம்பட்டி, புதுப்பட்டி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. பேரிகார்டுகளை வைத்து விபத்தினை தவிர்ப்பதற்கு பதில் நாளுக்கு நாள் பேரிகார்டுகளால் விபத்துகள் அதிகரிப்பதாக டிரைவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தனியார் பஸ்கள், கார்கள் போன்றவை பேரிகார்டுகளை கண்டுகொள்ளாமல் அதேவேகத்தில் செல்கின்றன.

திருமங்கலத்தில் இருந்து சிவகாசி, கோவில்பட்டி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் அசுரவேகத்தில் செல்கின்றன. அப்போது பேரிகார்டுகளை இடித்து தள்ளி விட்டு எதிரே வரும் வானோட்டிகளுக்கு விபத்துகள் உண்டாகி வருகின்றன. இரவு நேரத்தில் பேரிகார்டுகள் இருப்பது தெரியாமல் டூவிலர்களில் வருவோர் பேரிகார்டுகளில் சிக்கி உயிரிழப்பதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. எனவே பேரிகார்டுகளை அகற்றி நான்கு வழிச்சாலை கிராமபுற இணையும் பகுதியில் வேகத்தடைகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Barracks ,
× RELATED 2 கட்டுமான நிறுவன அதிபர்களுக்கு சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை