வழக்குகளை விரைந்து முடித்து கிரானைட் குவாரிகளை திறக்க தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

மேலூர், நவ. 14: கிரானைட் குவாரிகள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடித்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனுக்காக மீண்டும் குவாரிகளை திறக்க கோரி நேற்று மேலூரில் உண்ணாவிரத போரட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாடு கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அவை சார்ந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் மேலூர் கோர்ட்டிற்கு எதிர்புறம் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. அனுமதியின்றி அந்த இடத்தில் போராட்டம் நடத்தப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்ததும், போராட்ட இடம் பஸ் ஸ்டாண்ட் அருகில் மாற்றப்பட்டது.

கீழையூர், கீழவளவு டாமின் குவாரியில் 1991ம் ஆண்டின் ஒப்பந்தபடி 1000 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். நீண்ட காலமாக மூடிக் கிடக்கும் கிரானைட் குவாரிகளை திறக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் 84 குவாரிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வேகப்படுத்தி போர்கால அடிப்படையில் முடிவு செய்து அக்குவாரிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில தலைவர் பொற்கை பாண்டியன், மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் தெய்வேந்திரன், துணை செயலாளர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் மாணிக்கம், பொருளாளர் ஆறுமுகம், செயலாளர் கார்த்திக் மைதீன் உட்பட பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: