திருமங்கலம் கடைகளில் வெவ்வெறு விலையில் உரங்கள் விற்பனை

திருமங்கலம், நவ.14:திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று தாசில்தார் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுபணித்துறை, வேளாண்மை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வழக்கம் போல் வனத்துறை, ஊரகவளர்ச்சி துறையினர் கலந்து கொள்ளவில்லை. ஆலம்பட்டியை சேர்ந்த வெள்ளையன் கூறுகையில், ஆலம்பட்டி, ராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வயல்களில் காட்டு பன்றிகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. விளைந்த பயிர்களை நாசம் செய்கின்றன. இதனை கட்டுபடுத்தவேண்டும் என்றார். தாசில்தார் நாகரத்தினம் கூறுகையில், இதுகுறித்து கடந்த மாதம் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் வனத்துறையினர் பதில் அளித்தனர். பன்றிகளை கட்டுப்படுத்த அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வடமாநிலங்களில் உள்ளது போல் தமிழகத்தில் பன்றிகளை சுட்டுகொல்லும் அதிகாரம் இதுவரையில் இல்லை என்றார்.

சாத்தங்குடி விவசாயி ராஜவேலு பேசுகையில், சாத்தங்குடி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது சாத்தங்குடி, புலியூர் கண்மாயில் தண்ணீர் இருந்தாலும் இது போதுமானது கிடையாது. எனவே சாத்தங்குடி விவசாயிகளின் நலன்கருதி வைகை தண்ணீரை சாத்தங்குடி கண்மாய்க்கு கொண்டு வரவேண்டும் என்றார். தாசில்தார் பதில் கூறுகையில், தாலுகாவில் சாத்தங்குடி, புலியூர் மற்றும் அம்மாபட்டி கண்மாய்களை நாங்கள் அடிக்கடி கண்காணித்து வருகிறோம். இந்த மூன்று கண்மாய்களும் அடிக்கடி உடையும் அபாயம் உள்ள கண்மாய்கள். தற்போது சாத்தங்குடி, புலியூர் கண்மாய்களில் 65 சதவீதம் தண்ணீர் உள்ளது. இருப்பினும் உங்களது கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கிறோம். முத்துராமன், கப்பலூர் ரமேஷ் பேசுகையில், கப்பலூர் கண்மாய் ஆக்கிரமைப்புகளை அகற்றவேண்டும். கூத்தியார்குண்டு கண்மாய் நிரம்பும் நிலையில் உள்ளது. ஆனால் கரையை மணல் மூடை போட்டு சிலர் அடைத்துள்ளனர். அதனை அகற்றினால் அந்த தண்ணீர் அருகேயுள்ள சொக்கநாதன்பட்டி கண்மாய்க்கு வந்து கப்பலூர் கண்மாய்க்கு வரும். உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Related Stories: