×

கஜா புயலை சமாளிக்க 33 மீட்புக்குழு அமைப்பு

மதுரை, நவ. 14:  கஜா புயலுக்காக மதுரை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கடந்த 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு கஜா என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை கடலூர்  - பாம்பன் இடையே கரையை கடக்க கூடும் என்பதால், கடலோர மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மதுரை அதிகாரிகள் கூறும்போது, ‘‘இந்த மழையால், மதுரை மாவட்டத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.  இருந்தாலும், வடகிழக்கு பருவமழை மற்றும் மழை வெள்ளம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்டத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்படக் கூடிய பகுதி என 24 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மண்டல அளவில் அரசு அலுவலர்களை கொண்ட 11 குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளன. அனைத்து தாலுகாவிலும் வெள்ளச் சேதத்தை தடுக்க 33 ஆரம்ப எச்சரிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. 33 இயற்கை இடர்பாடுகள் நிவாரணம் மற்றும் மீட்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, தங்க வைக்கவும், உணவு வழங்கவும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. எந்நேரமும் செயல்படக் கூடியவர் என 64 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை தங்க வைக்க 46 கட்டிடங்கள், கூடுதலாக 146 கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ராமநாதபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர் குழுக்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றனர்.

Tags : ghazal storm ,
× RELATED கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில்...