கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட முடியாத சிக்கலில் மாநகர் நெரிசலை தீர்க்க மெட்ரோ ரயில் வருமா? ஒத்தக்கடை முதல் திருநகர் வரை ஆய்வுடன் நிற்கிறது

மதுரை, நவ. 14:  கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்ட முடியாத சிக்கல் நீடிக்கும் நிலையில் மாநகரின் போக்குவரத்து நெரிலை தீர்க்க மெட்ரோ ரயில் வருமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை முதல் மாநகரின் மைய பகுதி வழியாக திருநகர் வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் திட்டம் ஆய்வுடன் நிற்கிறது.  மதுரை மாநகரின் எல்கை 148 சதுர கி.மீ. பரப்பில் உள்ளது. அதையும் தாண்டி மாநகரம் விரிவடைந்து கொண்டே போகிறது. சுற்றிலும் நான்கு வழிச்சாலைகள் அமைந்திருந்தாலும், மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் தீராத தலைவலியாக நீடிக்கிறது. நெருக்கடிக்கு தீர்வு காண 2011ல் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் திட்டம் கனவாகி கலைந்தது. இதன் பிறகு சென்னையை போல் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என 2012ல் தமிழக அரசு அறிவித்தது. இதன்படி ஒத்தக்கடை வேளாண் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி, ஐகோர்ட் கிளை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், மாவட்ட நீதிமன்றம், தல்லாகுளம், கோரிப்பாளையம், யானைக்கல், வடக்கு வெளி வீதி, மேலவெளிவீதி,  பெரியார் பஸ் ஸ்டாண்ட், திருப்பரங்குன்றம் ரோடு, வழியாக திருநகர் அருகே தேசிய நெடுஞ்சாலை வரை சுமார் 35 கி.மீட்டர் தூரம் மெட்ரா ரயில் பாதை அமைக்க வாய்ப்புள்ளதாக பொறியியல் வல்லுனர்கள் குழு முதற்கட்ட ஆய்வில் மெட்ரோ ரயில் பாதை அமைக்க பரிந்துரை அளித்தது. “இந்த வழித்தடங்களில் தற்போதுள்ள அகன்ற வீதிகளில் மேம்பாலம் கட்டி அதன் மேல்தளத்திலும், தேவையான இடங்களில் சுரங்க பாதையிலும் தண்டவாளம் அமைத்து மெட்ரோ ரயில் இயக்க சாத்திய கூறு உள்ளது” என்பது அந்த குழுவின்  யோசனையாக அரசுக்கு அளிக்கப்பட்டது.

அந்த ஆய்வுடன் மெட்ரோ ரயில் திட்டம் 6 ஆண்டுகளுக்கும் மேலாக நகராமல் நிற்கிறது. தற்போது கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பில் பறக்கும் பாலமோ? உயர்மட்ட பாலமோ எதுவும் கட்ட முடியாத சிக்கல் நீடிக்கிறது. இதேபோல் வடக்கு வெளிவீதி, மேலவெளி வீதியிலும் உயர்மட்ட பாலம் கட்டும் திட்டமும் ஆய்வுடன் முடங்கி கிடக்கிறது.

இந்த நிலையில் மாநகரின் நெரிசலை தீர்க்க மெட்ரோ ரயில் வருமா? எப்போது வரும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டியில் ஏமாற்றம் போக்குவரத்து ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- ‘‘மதுரை மாநகரின் மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டுகிறது. உலக புகழ் மிக்க மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் மலையில் அமைந்துள்ள கள்ளழகர் கோயிலுக்கு பக்தர் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் வந்து குவிகிறார்கள். ஐகோர்ட் கிளை, பல்கலை கழகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ளது.

வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.  மாநகரில் தற்போதுள்ள வீதிகளை விஸ்தரிக்க வாய்ப்பில்லை. முக்கிய வீதிகள் அனைத்தும் ஒருவழி பாதையாகி விட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதிலிருந்து மீள மெட்ரோ ரயிலே தீர்வாக அமையும். மதுரை “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால் மெட்ரொ ரயில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மெட்ரோ ரயில் சேர்க்காமல் கைவிரித்தது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த திட்டம் நிறைவேறுவதற்கான காலம் கனிந்தால் தான் விமோச்சனம்’’ என்றனர்.

Related Stories: