ஒட்டன்சத்திரம் அருகே சிரமம் தரும் சுரங்கம் மிக தாழ்வாக அமைக்கப்பட்டதாக புகார்

ஒட்டன்சத்திரம், நவ. 14:  ஒட்டன்சத்திரம் அருகே மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையால் பொதுமக்கள், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம், விஸ்வநாதநகர் தெற்கு தோட்டம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழநி ரோட்டில் இருந்து தெற்கு தோட்டத்திற்கு ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டியிருந்தது. பின்னர் இப்பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த சுரங்கப்பாதை மிகவும் தாழ்வாகவும், பள்ளமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வாகனங்களில் எடுத்து செல்ல முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். தவிர மாணவ, மாணவிகளும் பள்ளம் காரணமாக நடந்து செல்லும்போது அடிக்கடி கீழே விழும் நிலை உள்ளது. மேலும் சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்று அவ்வழியே செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியினர் ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதையை சமன் செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: