×

வாடிக்கையாளர் பெயரில் கடன் மோசடி முன்னாள் வங்கி மேலாளர் ஜாமீன் 5வது முறை தள்ளுபடி

திண்டுக்கல், நவ. 14: வாடிக்கையாளர் பெயரில் கடன் மோசடி செய்த வழக்கில் கைதான முன்னாள் வங்கி மேலாளரின் ஜாமீன் மனுவை 5வது முறையாக தள்ளுபடி செய்து திண்டுக்கல் கோர்ட் உத்தரவிட்டது. திண்டுக்கல் ஆர்எம் காலனியில் உள்ள அலகாபாத் வங்கியில் மேலாளராக பணியாற்றியவர் சொர்ணபிரியா. இவர் வங்கியில் கணக்கு வைத்திருந்த திண்டுக்கல்லை சேர்ந்த குமரேசன், மகேஸ்வரன், கருணாகரன், கதிரேசன், கோனூரை சேர்ந்த திம்மையா, காரைக்குடியை சேர்ந்த சொக்கலிங்கம், சென்னையை  சேர்ந்த குமரேசன், யாசர் அராபத் ஆகியோர் பெயரில் சுமார் மூன்றரை கோடி ரூபாய் வரை கடன் மோசடி செய்ததாக  புகார் எழுந்தது. இதில் குமரேசன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சொர்ணபிரியா மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் 2ல் சொர்ணபிரியா மனு தாக்கல் செய்தார். இதுவரை 4 முறை அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று 5வது முறையாக இவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பாலமுருகன் மனுவை 5வது முறையாக தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மற்ற 7 நபர்களும் தங்கள் புகாரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி பாலமுருகன் ஒவ்வொருவரின் புகாரின் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யுமாறு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags : bank manager ,customer ,
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி