பிளாஸ்டிக் பையுடன் சென்றால் ரேஷன் பொருட்கள் ‘கட்’ துணிப்பை அவசியம்

திண்டுக்கல், நவ. 14: பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ரேஷன்கடைக்கு வரும் போது இவற்றை கொண்டு வரக்கூடாது. துணிப்பையே கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு  கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கலெக்டர் வினய் தலைமை வகிக்க, எம்பி.உதயகுமார் முன்னிலை வகித்தார். இதில் தெரிவிக்கப்பட்ட விபரங்கள்: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2016 நவம்பர் முதல் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் குறிக்கோள் முன்னுரிமை குடும்பங்களை கண்டறிந்து அரசின் அத்யாவசிய உணவுப் பொருட்கள், ஊட்டச்சத்து போன்றவை ரேஷன் மூலம் கொண்டு செல்வதாகும். இதனைக்ஷ கண்காணிக்க அரசால் நியாயவிலை கடைவாரியாகவும், வட்ட, மாவட்ட அளவிலும் கண்காணிப்புக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு  கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இக்குழு உறுப்பினர்களின் புகைப்படங்களுடன் கூடிய விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் காட்சிப்படுத்தவும், ரேஷன்கடைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இதற்காக முன்னுரிமை குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வருங்காலத்தில் களப்பணி மேற்கொண்டு தகுதியானர்களை சேர்க்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அரசால் வழங்கப்படும் இலவச அத்யாவசியப் பொருட்களை பெற ஆதார்எண் கட்டாயம். எனவே ஒருவாரத்திற்குள் இணைக்க வேண்டும். தற்போது பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்க அரசு தடைவிதித்துள்ளது. எனவே ரேஷன்கடைகளுக்கு வரும் போது துணிப்பையை மட்டுமே கொண்டு வர வேண்டும். அவ்வப்போது புயல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருவதால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள ரேஷன்கடைகளில் அத்யாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடத்தில் வைக்க வேண்டும். மொபைல் எண்ணை இணைக்காத கார்டுதாரர்கள் உடனடியாக இம்மாததத்திலே இவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மண்டல இணைப்பதிவாளர் குமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சிவக்குமார், கோட்டாட்சியர் ஜீவா, மாவட்ட வழங்கல்அலுவலர் ஜான்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: