×

ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது கொசு உற்பத்தி கூடாரமான காரைக்குடி தீவிரமாக பரவும் மர்மக்காய்ச்சல் மக்கள் கடும் பீதி

காரைக்குடி, நவ.14: காரைக்குடி நகராட்சி மழைநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேடாக காணப்படுவதால், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காரைக்குடி நகராட்சியில் 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். நகராட்சியை பொறுத்தவரை மக்களின் தேவை, வளர்ச்சிக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை. பாதிக்கு மேற்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களே இல்லாத அவலநிலை உள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகளில் தான் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால் கழிவுநீர் முறையாக செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது. சில பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. அப்பாட் மெண்டுகள், லயன் வீடுகளில் முறையாக கழிவு நீர் செல்ல வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. கழிவுநீர் செல்ல வழியில்லாததால் கொசு, ஈ அதிக அளவில் முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது. தவிர கழிவுநீர் கால்வாய்களில் மண் அடைத்து மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லமுடியாத நிலை உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டிய நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. மேலும் தெருக்கள் முழுவதும் செடிகள், முட்புதர்கள் மற்றும் குப்பைகள் மண்டி கிடக்கின்றன.

இது போன்ற சுகாதாரக்கேடுகளால், காரைக்குடியில் பலர் டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சுகாதாரத்தை பேணவேண்டிய நகராட்சி நிர்வாகம் மெத்தனபோக்காக செயல்படுவதால் காய்ச்சல் அதிகஅளவில் பரவி வருவதால் மக்கள் உயிர்பயத்தில் உள்ளனர். மக்கள் கூறுகையில், ‘‘நகராட்சி அதிகாரிகள் பெயரளவில் அவ்வப்போது தனியார் மருத்துவமனைகள், வணிகநிறுவனங்கள், திருமணமண்டபங்களை ரெய்டு நடத்தி தங்களது கடமையை முடித்துகொள்கின்றனர். கொசுமருந்து அடிப்பது, கொசு புகை அடிப்பது, நிலவேம்பு கசாயம் கொடுப்பது போன்ற பணிகளை தொடந்து செய்வது கிடையாது. கொசுக்களை ஆரம்ப கட்ட நிலைலேயே தடுக்க முன்பு வீடுகளில் உள்ள கிணறு மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கம்போசியா மீன் குஞ்சுகள் விடப்பட்டது. இந்த மீன்கள் கொசு லார்வாக்களை சாப்பிடும் குணம் கொண்டது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் எண்ணெய் ஊற்றப்பட்டது. இந்த பணிகளை எல்லாம் மூட்டை கட்டி மறந்துபோய்விட்டனர்.

பாதாளசாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி கொசு வளர்ந்து வருகிறது. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்காமல் வீடு, வீடாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பயன்இல்லை. குப்பை அகற்றுவது, கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்வது, தெருக்களை சுத்தம் செய்வது போன்ற பணிகளை முறையாக செய்தாலே கொசுக்களை கட்டுப்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு மக்களையும், தனியார் நிறுவனங்களையும் அபராதம் என்ற பெயரில் மிரட்டி பயன்இல்லை’’ என குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags : storm ,Karaikudi ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...