×

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, நவ.14: சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர்(பொ) ராமநாதன் தெரிவித்துள்ளதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.ஆயிரம் என மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிட்டு வழங்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்பவராக இருத்தல் கூடாது.

கடந்த காலாண்டிற்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய மனுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணத்துடன் தற்போதைய தேதி வரை குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தை இணைத்து வழங்கி உதவித்தொகை பெறலாம். சுய உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப்படிவம் சமர்ப்பிக்காதவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் படிவம் சமர்பித்து உதவித்தொகை பெறலாம். உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : persons ,
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது